விஜய் அமைதியானவர் - ஸ்ரீதேவி பாராட்டு



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஸ்ரீதேவி என்றுமே அதே '16 வயதினிலே மயிலு'தான்.

அந்தக் காலத்தில் வெறும் கிளாமருடன் மட்டுமல்லாமல் அற்புதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அந்தக் காலத்துப் பெண்களையும் கவர்ந்தவர் ஸ்ரீதேவி. அதன் பின் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து இந்தியாவின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'புலி' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ஸ்ரீதேவியை திரையில் பார்த்து ரசிக்க கொஞ்சம் வயதான ரசிகர்களும் கூட ஆவலுடன் காத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

'புலி' படம் பற்றி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் ஸ்ரீதேவி. “புலி' படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் மாதிரி வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். அப்படி ஒரு வாய்ப்பு வந்த போது வேறு எந்த யோசனையும் இல்லாமல் நடிக்க சம்மதித்தேன். இப்படத்தில் என்னுடைய ஒவ்வொரு விஷயமும் எனக்கு சிறப்புதான். படத்தில் மட்டும் நான் ராணியில்லை.

படப்பிடிப்பில் கூட என்னை ராணி மாதிரி பார்த்துக் கொண்டனர். இந்த கதாபாத்திரம் பல தன்மைகளைக் கொண்டது. கதைகளில் படித்ததைப் போன்ற ராணியெல்லாம் கிடையாது. இப்படி ஒரு தமிழ்ப் படத்தை தமிழ்த் திரையுலகம் இதுவரை பார்த்திருக்காது. அனைவருக்குமான படம் இது.
விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார்.

எந்த விதமான விவாதமோ வாதமோ வைத்துக் கொள்ள மாட்டார். நடிப்பின் மீது அதிக ஆர்வத்துடன் வேலை பார்ப்பார். கூட நடிப்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக, ஆதரவாக, ஊக்கமளிப்பவராக இருப்பார்,” என விஜய்யைப் பற்றியும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.