அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் 'புலி' ரிலீஸ்

'புலி' திரைப்படம் வெளியாக இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் உலகம் முழுவதும் எத்தனை நூறு தியேட்டர்களில் வெளியாகப் போகிறது , தமிழ்நாட்டில் எவ்வளவு தியேட்டர்களில் வெளியாகப் போகிறது போன்ற செய்திகள் அதிகம் வர ஆரம்பிக்கும். இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட அதிக பொருட்செலவிலும், முன்னணி நட்சத்திரங்களுடனும், முக்கிய நட்சத்திரங்களுடனும் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. 'எந்திரன், ஐ' ஆகிய படங்கள் அளவிற்கு 'புலி' படமும் உலகம் முழுவதும் பேசப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விஜய்க்கு ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ரசிகர்கள் அதிகமிருப்பதால் 'புலி' படம் அங்கெல்லாம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று வெளிநாடுகளின் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கூடுதல் அம்சமாக ஸ்ரீதேவி இருப்பதால் ஹிந்தி ரசிகர்களும், சுதீப் இருப்பதால் கன்னட ரசிகர்களும் கூட உலகம் முழுவதும் பார்த்து ரசிப்பார்கள்.
ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் படமாக எதிர்பார்க்கப்படும் 'புலி' படத்தை அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட அமெரிக்க வினியோக நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். நாட்கள் நெருங்க நெருங்க அது இன்னும் கூடுதலாகலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அது தொடர்ந்து பல வாரங்கள் நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.