புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி டி.ஆரின் அனல்பறக்கும் பேச்சு



விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட டி. ராஜேந்தர் பேசுகையில்,

அமைந்தது நல்ல தலைவிதி அதனால் தான் நான் தமிழகத்தின் இளைய தளபதி என்று பெயர் எடுத்திருக்கும் இளைய தளபதியாய் இந்த ரசிக பட்டாளத்தின் அன்புக்குரிய அதிபதியாய் இருக்கக் கூடிய விஜய்யின் புலி திரைபடத்தின் இசை வெளியீ்ட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பல மேடைகளில் பேசியிருக்கலாம். ஆனால் இந்த மேடை ரொம்ப புதுசு. நான் இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு காரணமானது ஒரு நடிகன் வளர்ந்துவிட்டப் பிறகு தன்னடகத்துடன் இருப்பது மிகவும் கடினம்.

சிம்புவுக்கு அண்ணன் மாதிரி இருப்பவர் விஜய் தான். இது தான் உண்மை. நண்பன் படத்தில் நடிச்சா மட்டும் போதாது. வாழ்க்கையில் நல்ல நண்பனாக இருக்கத் தெரியணும்.

விஜய்யிடம் உள்ளது நல்ல நட்பு, அவர்கள் பார்த்தது எல்லாம் நட்பு. உணவு நல்லா இருக்க வேண்டும் என்றால் அதற்கு தேவை உப்பு, உணர்வு நல்லா இருந்தால் தான் வரும் இந்த மாதிரி நட்பு.

உன்னுடைய ரசிகர்கள் தரலாம் ஆயிரம் மரியாதை. ஆனால் எனக்கு உன்னிடத்தில் மரியாதை. காரணம் நீ நடித்த படம் காதலுக்கு மரியாதை.

பூவிடம் இருப்பது வாசம், வாசலிலேயே தெரிந்தது இந்த பூவின் வாசம், காரணம் இவர் நடிச்ச படம் பூவே உனக்காக, நான் வாசலில் வரவேற்றது பூவே உனக்காக, நான் இங்கு வந்தேன் உனக்காக.

தரணியாக இருந்தாலும் சரி இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாராக இருந்தாலும் சரி, பேரரசாக இருந்தாலும் சரி, நண்பர் எஸ்.ஜே. சூர்யாவாக இருந்தாலும் சரி இயக்குனர்கள் வியக்கும் நீ தான் நடிகனின் இலக்கணம்.

இந்த நாட்டில யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் பல வல்லரசு ஆனால் தேவை நல்லரசு நீ உருவாக்கின பாரு ஒரு பேரரசு அதனால் தான் கொட்டுத்து வெற்றி முரசு.

தம்பி உன்னிடத்தில் பார்க்கவில்லை தலைக்கனம். நீ தான் தன்னம்பிக்கையின் இலக்கணம்.

நீ படத்தில் பேசுவது இல்லை கத்தி. ஆனால் நீ நடிச்ச படம் கத்தி. எனக்கு தெரியும் உன்னை பத்தி. அதனால தான் உன் ரசிகர் படை நிற்கிறது இப்படி சுத்தி. அவர்களை எப்படி கவர வேண்டும் என்று உனக்கு தெரியும் யுக்தி. அது தான் உன்னுடை சக்தி. அந்த அளவுக்கு உனக்கு பெரியவர் மீது இருக்கு பக்தி.

விஜய்யை பத்தி நிறைய பேச இருக்கிறது. ஆனால் இது மேடை என்பதால் பேச முடியாது. ஆனால் நீ பேசச் சொன்னால் ஒரு 5 வார்த்தை பேசுகிறேன்.

என்னை மதிக்காத இடத்திற்கு போவது இல்லை. என்னை மதிக்காதவர் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மவுண்ட் பேட்டன் பிரபுவாக இருந்தாலும் சரி அந்த இடத்திற்கு போக மாட்டேன். என்னை மதிப்பவர்கள் மண் குடிசையில் இருந்தாலும் அந்த இடத்தை மதிப்பேன், மிதிப்பேன்.

நான் விஜய்யை பாராட்டுவது என்னுடயை உடன் பிறந்த சகோதரனுடைய மகனை பாராட்டுவது போன்று. நான் விஜய்யின் உண்மையான ரசிகன். ஏனென்றால் அலட்டிக் கொள்ளாத தன்னடக்கமிக்க சிம்பிளான ஹீரோ.

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்தபோது அண்ணா ஒரு தமிழனாக நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் போட்டதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்தும் மறக்கக் கூடிய உலகில் சிம்புவின் வாலு படத்திற்கு வந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்.

சிம்பு இன்னொருத்தரின் ரசிகர் என்று தெரிந்தும் உதவியுள்ளார். வேறு ஒரு நடிகனைப் பற்றி பாடிய சிம்புக்காக அவரது வாலு படத்திற்கு பிரச்சனை என்றவுடன் சிம்பு யாருக்கோ ரசிகன் ஆனால் விஜய்க்கு நண்பன்.

விஜய்யின் அன்புத் தம்பி சிம்பு. விஜய் ஒரு தமிழன், சிம்பு ஒரு தமிழன். நாட்டில் இருக்கலாம், காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அபூர்வ புலி ,அற்புத புலி, தமிழ் புலி என்று பாராட்டினார்.